×

கொரோனா பரிசோதனை கட்டணம் வசூலித்து மோசடி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்: அதிகாரிகளின் சமரசத்தை அடுத்து முகாமில் தங்க வைப்பு

சென்னை: குவைத்திலிருந்து மீட்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்ட இந்தியர்கள், கொரோனா கட்டணம் வசூலித்து மோசடி செய்த ஏஜென்ட்டை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்த 40 பெண்கள் உட்பட 309 இந்தியர்கள் மீட்கப்பட்டு குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இந்திய அரசின் மீட்பு விமானத்தில் வராமல் ஏஜென்ட் ஏற்பாடு செய்த தனியார் விமானத்தில் வந்திருந்தனர். இதனால் இவர்களுக்கு அரசின் இலவச தங்குமிடங்கள், விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள் கிடையாது. அதற்கு பயணிகளே பணம் செலுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறினர்.

இதை ஏற்காத பயணிகள், நாங்கள் குவைத்தில் கூலிவேலை செய்கிறோம். கடந்த 5 மாதங்களாக எங்களுக்கு வேலை இல்லை. சாப்பாட்டிற்கு கூட மிகவும் சிரமப்பட்டோம். நாங்கள் குவைத்தில் இருந்து புறப்பட்டபோதே, எங்கள் ஒவ்வொருவரிடமும் ஓட்டல், சாப்பாடு, விமான டிக்கெட், கொரோனா பரிசோதனை என அனைத்திற்கும் சேர்ந்த்து ரூ.60 முதல் ரூ.70 ஆயிரம் வரை ஏஜென்டுகள் வசூலித்து விட்டனர். நாங்கள் ஊருக்கு வந்தால் போதும் என்ற நிலையில் பலரிடம் கடன் வாங்கித்தான் இங்கு வந்தோம். இப்போது எங்களிடம்  பணம் இல்லை என்று கூறி கடும் வாக்குவாதங்களில் ஈடுப்பட்டனர்.

ஏற்கனவே ஏஜென்டுகளிடம் ஏமாந்த நாங்கள், மீண்டும் எப்படி கட்டணத்தை செலுத்த முடியும், எனக்கூறி விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வசூலித்த ஏஜென்டுகள் யாரும் உடன் வராததால், அதிகாரிகளும், போலீசாரும் பயணிகளை அமைதிப்படுத்தினர். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது ஏஜென்டுகள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் கூறினர். அதையடுத்து விமான நிலைய அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் சேர்ந்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்தனர். அதன்படி 280 பேர் அரசின் இலவச தங்குமிடங்களான திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். 29 பேர்  மட்டும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டலுக்கு சென்றனர்.

* ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து 176 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 28 வயது ஆண் பயணி உடலின் பின்பகுதியில் ஒரு சிறிய பார்சலை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது, 180 கிராம் எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Passengers ,airport ,compromise ,camp , Corona, inspection fees, charging fraud, airport, passenger struggle
× RELATED புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!